சென்னை: சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.
சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையக் கட்டுமானப் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு வழித் தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு வழித் தடத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வேயிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இந்நிலையில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுவதற்கு தெற்கு ரயில்வே ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.
இங்கு புதிய ரயில் நிலையம், நடை மேடைகள் தொடர்பாக நிரந்தர பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், மூன்று நடை மேடைகளுடன் அமைய உள்ளது. புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஓர் ஆண்டுக்குள் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, "கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளோம். ஒப்பந்தம் வழங்கி,ஓர் ஆண்டுக்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். மக்கள் பயன்பாடு அதிகரிக்கும் போது, இந்த ரயில் நிலையம் மேலும் வளரும்" என்றனர்.