கு.தியாகராஜன் | கோப்புப் படம் 
தமிழகம்

ஆசிரியர் போராட்டத்துக்கு அதிமுக ஆட்சியே காரணம்: ஆசிரியர் முன்னேற்ற சங்கம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ஆசிரியர்களின் போராட்டத்துக்கு காரணமே கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக-தான் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த போது ஆசிரியர்களின் போராட்டங்களை முன்னாள் முதல்வர் பழனிசாமியின் வழிகாட்டுதலுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொச்சைப் படுத்தினார். தற்போது ஆசிரியர்கள் நடத்தும் போராட்ட களத்துக்குச் சென்று ஜெயக்குமார் நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார்.

மேலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று பழனிசாமியும் அறிக்கை வெளியிடுகிறார். சம வேலைக்குச் சம ஊதியம் கேட்டுப் போராடும் ஆசிரியர்களும் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியிலும் தங்களது கோரிக்கைகளுக்காகக் கடும் போராட்டங்களை நடத்தியவர்கள் தான். தற்பொழுது நடைபெறும் போராட்டங்கள் அனைத்துக்கும் காரணமே கடந்த அதிமுக ஆட்சிதான்.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது, அகவிலைப் படி உயர்வை ரத்து செய்தது, சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு ரத்து செய்தது இப்படி பல உரிமைகள் இவர்கள் ஆட்சியில் பறிக்கப்பட்டன. போராடினால் கைது செய்வது, பணியிடை நீக்கம் செய்வது, இடமாற்றம் செய்வது போன்றவற்றை செய்து விட்டு இன்றைக்கு நீலிக் கண்ணீர் வடிப்பது ஏற்க இயலாதது. கடும் கண்டனத்துக்குரியது.

இது ஆசிரியர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தையும் நிச்சயம் விரைவில் அமல்படுத்துவார். இவ்வாறு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT