பெருங்களத்தூர்: பெருங்களத்தூர் பகுதியில் உள்ள காலி மனைகளில் நாள் கணக்கில் தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தி அதிகரிப்பதால், அதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்உங்கள் குரல் பதிவில் பழைய பெருங்களத்தூரை சேர்ந்த லலிதா என்பவர் கூறியது: சென்னை புறநகரில் அவ்வப்போது மழை பெய்கிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. குறிப்பாக தாம்பரம் மாநகராட்சியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி மனைகள் உள்ளன.
இதில், மழைநீர் தேங்கியது. சில இடங்களில், தானாக வடிந்தது. சில இடங்களில் மோட்டார் கொண்டும் நீர் வெளியேற்றப்பட்டது.பல பகுதிகளில் உள்ள காலி மனைகளில், இன்னும் வெள்ள நீர் தேங்கி உள்ளது.
மழை நின்றும், நாள் கணக்கில் தேங்கிநிற்கும் மழை நீரில், கொசுப்புழு உற்பத்தியாகி வருகிறது. இதனால், கொசு தொல்லைஅதிகரித்து, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக புதிய மற்றும் பழைய பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, அனகாபுத்தூர், தாம்பரம் கிழக்கு, மேற்கு, மாடம்பாக்கம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காலி மனைகளில் இன்னமும் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த மனைகளில் தேங்கிய மழைநீர் வடியாமல், குளம்போல் காணப்படுகிறது. பாசி படிந்து பச்சையாக மாறிவிட்டதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் சூழல் அதிகரித்துள்ளது. மேலும், புதர்மண்டி கிடக்கும் காலி மனைகளில் கழிவு நீரும் கலந்து தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மனைகளை வாங்கி போட்ட உரிமையாளர்கள் முறையாக பராமரிப்பதில்லை. பருவமழை காலம் தொடங்க உள்ளதால் மக்கள் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர். காலிமனைகளில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க, மாநகராட்சி சுகாதாரத்துறை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் கூறியது: காலிமனை உரிமையாளர்கள் தங்களது காலிமனையை சுத்தம் செய்து சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருக்கவும் அனைவரும் சுகதாரத்தோடும் வாழவும் ஒத்துழைக்குமாறு கேட்டுகொண்டு இருக்கிறோம். சில இடங்களில் மாநகராட்சியே சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.
‘ஆயில் பால்’ - மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரில், கொசு உற்பத்தியை தடுக்க, ‘ஆயில் பால்’ என்ற புதிய முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. "கரித்துண்டு, நெல் உமி, கழிவு ஆயில், சாக்கு இவற்றை ஊற வைத்து பின்னர், கால் கிலோ, அரை கிலோ பைகளில் அவற்றை அடைத்து மழைநீர் தேங்கிய இடங்களில் வீசப்படுகிறது. இந்த கூட்டுப் பொருட்கள், கொசு முட்டைகளை நீரிலேயே அழித்துவிடும் தன்மை கொண்டது. இதன்மூலம், ஆயில் படலம் தண்ணீரில் பரவுவதால், கொசு புழுக்களின் சுவாசம் தடைபட்டு, அவை இறந்து விடும். இவ்வாறு தெரிவித்தனர்.