பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முருகேஷ் 
தமிழகம்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழில் மைய பொது மேலாளர் வீட்டில் ரூ.8 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட தொழில் மையப் பொது மேலாளரின் வீட்டில் ரூ.8 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சேர்ந்தவர் முருகேஷ்(43). கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையப் பொது மேலாளராகப் பணியாற்றி வந்த இவர், ஊழல் புகார் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

முன்னதாக அவர் திருநெல்வேலி மாவட்ட தொழில் மையப்பொது மேலாளராகப் பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில் கடந்த 4-ம் தேதி வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், நீதிமன்ற அனுமதியுடன் முருகேஷ் வீட்டில் நேற்று முன்தினம் மாலை சோதனை மேற்கொண்டனர்.

ஆய்வாளர் ராபின் ஞானசேகர் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு 12 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராதபணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

முருகேஷ் தனது பெயரிலும், மனைவி சசிகலா பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதும் ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சில பினாமி பெயரிலும் முருகேஷ் திருநெல்வேலி மாநகரின் முக்கியப் பகுதிகளில் சொத்துகள் வாங்கியதாகத் தெரிகிறது. குறிப்பாக, வி.எம்.சத்திரம், கேடிசி நகர் போன்ற பகுதிகளில் பல கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கி, கட்டிடங்கள் கட்டியிருப்பதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் போலீஸாரிடம் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முருகேஷ் வீட்டிலிருந்து 128ஆவணங்கள், அலுவலகத்தில் 93 ஆவணங்கள் என ரூ.8 கோடிமதிப்பில் 221 சொத்து ஆவணங்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வீட்டிலிருந்து ரூ. 1.77 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT