தென்காசி மாவட்டம் கடையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட தனியார் பல் கிளீனிக்குக்கு `சீல்' வைத்த அதிகாரிகள். 
தமிழகம்

மது போதையில் சிகிச்சை அளிக்க முயன்ற பல் மருத்துவர்: கிளீனிக்குக்கு ‘சீல்’ வைத்த சுகாதாரத் துறை அதிகாரிகள்

செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி அருகே போதையில் சிகிச்சை அளிக்க முயன்ற பல் மருத்துவரின் கிளீனிக்குக்கு சீல் வைக்கப்பட்டது.

கடையம் பகுதியில் மருத்துவர் ராமதங்கராஜன் என்பவர் கிளீனிக் அமைத்து, பல் மருத்துவம் செய்து வந்தார். கீழக்கடையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இவரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த ராமதங்கராஜன், சிகிச்சை அளிக்க முயன்றுள்ளார்.

மருத்துவர் போதையில் இருப்பதை அறிந்த அந்த நபர், மருத்துவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், மருத்துவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதை செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்நிலையில், தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, சுகாதாரத் துறை இணை இயக்குநர் பிரேமலதா, தேசிய சுகாதாரக் குழும மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுடைநம்பி, வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார் ஆகியோர் கடையம் சென்று, மருத்துவர் ராமதங்கராஜனின் கிளீனிக்கில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, அவர் உரிய அனுமதியின்றி கிளீனிக் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கிளீனிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “மது போதையில் சிகிச்சை அளித்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால், போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்” என்றனர்.

SCROLL FOR NEXT