தமிழகம்

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர் வாரிசுதாரர்களுக்கு ரூ.45 லட்சம் நிவாரணம்

செய்திப்பிரிவு

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர் இறப்பு நிதி திட்டத்தின் கீழ் வாரிசுதாரர்களுக்கு ரூ.45 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணியின்போது சாலை விபத்துகள், பணிமனையில் ஏற்படும் விபத்துகள், இயற்கை மரணம் மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் அவர்களது சட்டப்படியான வாரிசுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம்கடந்த மாதம் அமலுக்கு வந்தது.

அதன் அடிப்படையில் சக தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து மாதம் ரூ.260-க்கு மிகாமல் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. திட்டத்தின் தொடக்கமாக செப்டம்பர் மாதத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் பங்கேற்ற மேலாண் இயக்குநர் க.குணசேகரன் கூறுகையில், ``செப்டம்பர் சம்பள மாதத்தில் மட்டும் 14 தொழிலாளர்கள் பணிக்காலத்தில் இறந்துள்ளனர். தற்போது சம்பளம் வாங்கும் ஊழியர்கள் 19,144 பேர். ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்து ரூ.235 என்ற அளவில்சம்பளத்தில் பிடித்த செய்யப்பட்டுள்ளது.

இதில் ரூ.44 லட்சத்து 99,753 நிதி சேர்ந்துள்ளது. இதன் மூலம் 9 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படுகிறது. மீதமுள்ள 5 தொழிலாளர்களுக்கு அடுத்த மாத நிதித்தொகையில் வழங்கப்படும்'' என்றார். தொடர்ந்து, நிகழ்வில் பங்கேற்ற தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT