கடலூர்: என்எல்சி இந்தியா நிர்வாகத்தால் கையகப்படுத்திய நிலத்தில் வேலிஅமைக்கச் சென்ற அந்நிறுவன அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.
இதனால் சேத்தியாத்தோப்பு அருகே மும்முடிச் சோழகன் கிராமத்தில் பதற்றம் நிலவியது. என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கப் பணிக்காகசேத்தியாதோப்பு பகுதி சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராம விளைநிலங்களை, அதற்கான இழப்பீடுகளை வழங்கி கையகப்படுத்தி யுள்ளது. ஆனாலும், அந்த நிலங்களை என்எல்சி நிர்வாகம் தனது பயன்பாட்டுக்கு எடுக்காமல் இருந்து வந்தது.
இதனால் இழப்பீடு பெற்ற விவசாயிகள், தங்களுக்கான நிலங்களில் பயிர் செய்து வந்தனர். மேலும், தங்களுக்கு வழங்கியுள்ள இழப்பீட்டுத் தொகை மிகக்குறைவானது என்று கூறி போராட் டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே கடந்த ஜூலை மாதம், சேத்தியாதோப்பு பகுதியில் என்எல்சி நிர்வாகம் தான் ஏற்கெனவே கையகப்படுத்தியிருந்த நிலத்தில் தனது சுரங்கத் தேவைக்காக வாய்க்காலை வெட்டியது.
பயிர் செய்த விளைநிலத்தை, இப்படி செய்வது தவறு என விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இப்பகுதி விளை நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு என்எல்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், சேத்தியாத் தோப்பு அருகே உள்ள மும்முடிச் சோழகன் கிராமத்தில் என்எல்சி நிறுவனம், தனது நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் வேலி அமைக்க அந்த நிலத்தை நேற்று சமன் செய்தது.
இதற்காக அங்கு அதிகாரிகள் குவிய, பொக்லைன் மூலம் பணிகள் தொடங்கின. இதை அறிந்த மும்முடிச் சோழகன் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து, அதனை தடுத்து நிறுத்தினர். இது குறித்து தகவலறிந்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால், கிராமத்தினர் கலைந்து செல்லவில்லை. இதைத் தொடர்ந்து நிலத்தை சமன்படுத்தும் பணிகளை என்எல்சி அதிகாரிகள் நிறுத்தினர். பின்னர் வேறு ஒரு பகுதியில் சமன் செய்யும் பணியில் என்எல்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அங்கும் கிராம மக்கள் சென்று, அதை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு தரவில்லை. முதலில் தரப்பட்டது சொற்ப தொகையே. அதைத் தொடர்ந்தே சிறிய அளவில் இரண்டாவது இழப்பீட்டு தொகை தரப்பட்டுள்ளது. சுரங்கத் தேவைக்காக அவர்கள் பெரும் விளை நிலத்தின் விலையை ஒப்பிடும் போது இது குறைவானது.
இது தவிர விளை நிலத்தை விட்டுக் கொடுக்கும் எங்களுக்கு, வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை தர வேண்டும்” என்று தெரிவித்தனர். போலீஸார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கிராமத்தினர் கலைந்து செல்லவில்லை.