புதுச்சேரி: புதுவையில் டெங்கு கொசுக்களைகட்டுப்படுத்த, நீர் தேங்குமிடங்களில் கம்பூசியா மீன் வளர்க்கும் திட்டத்தை மீன்வளத்துறையுடன் இணைந்து சுகாதாரத்துறை செயல்படுத்த உள்ளது.
புதுவை மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையில் 1,421 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 71 பேர் தீவிர டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களில் 2 பேர் மட்டும் உயிரிழந்தனர். கடந்த ஜனவரியில் 294 பேருக்கு பாதிப்பிருந்த நிலையில், செப்டம்பரிலும் 269 பேருக்கு பாதிப்பிருந்தது.
அக்டோபரில் 21 பேருக்குமட்டுமே டெங்கு பாதிப்பு இருந்தது. புதுவை மாநில அளவில் நேற்று முன்தினம் மட்டும் புதுவை பிராந்தியத்தில் 39 பேரும், காரைக்காலில் 6 பேரும் என 45 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 32 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைபெறுகின்றனர். கடந்த ஆண்டு டெங்குவால் 1,673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிக்குன் குனியாவை பொறுத்த வரையில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 150 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். நடப்பாண்டில் சிக்குன் குனியா குறைந்துள்ளது.
டெங்குவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டதற்கு, “டெங்குவை பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரிலேயே முட்டையிட்டு பெருகுகின்றன. ஆகவே, பொதுமக்கள் தண்ணீரை தேங்கவிடாமல்இருப்பது அவசியம்.மருந்து தெளிப்பதால் கொசுக்கள் மயக்கமடையும்.
ஆகவே, கொசு உற்பத்தியை தடுப்பதே டெங்கு பாதிப்பை குறைக்கும் வழியாகும். அதற்காக கொசு லார்வாவை உண்டு வாழும் கம்பூசியா வகை மீன்களை வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதுவை மீன் வளத்துறையுடன் இணைந்து கம்பூசியா வகை மீன்களை வளர்க்க உள்ளோம். கம்பூசியா வகை மீன்கள் நல்ல தண்ணீர் உள்ள கிணறுகள் உள்ளிட்டவற்றில் விடப்பட்டு கொசுக்களது லார்வாக்கள் அழிக்கப்படவுள்ளன” என்றார்.
கம்பூசியா மீன்கள் தொடர்பாக பூச்சியியல் துறை தரப்பில் விசாரித்தபோது, “டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு காரணகர்த்தாவான கொசுக்களின் லார்வாக்களை சாப்பிடும் தன்மை கொண்டவை கம்பூசியா மீன்கள். 5 செ.மீ. நீளம் வரை மட்டுமே வளரும்.டெங்கு கொசுக்களை இயற்கை வழியில் இந்த மீன்கள் அழித்துவிடும்.
இந்த வகை மீன்களை மேட்டூர் அணைப் பகுதியில் வளர்த்தெடுக்கிறார்கள். அங்கிருந்து வாங்கி தரலாம். அலங்கார தொட்டிகள், அலங்கார நீரூற்றுகள், நன்னீர் குடுவைகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புகள் அதிகம். எனவே அவற்றில் விட இந்த வகை மீன்களை தரலாம். குளோரினேஷன் செய்யப்படும் நீரில் இந்த மீன்கள் வாழாது.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் வாழாது.
கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இவற்றை விட்டால் கொசுப் புழுக்கள் உருவாகாமல் தடுக்க முடியும். நன்னீர் தேக்கி வைக்கப்படும் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வகை மீன்களை கொண்டு சென்று வளர்த்து கொசுக்களை இயற்கையாகவே கட்டுப்படுத்தலாம்” என்று குறிப்பிட்டனர்.