மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக வட்டார கல்வி அலுவலர் சித்ராவிடம், பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். 
தமிழகம்

ஆலங்காயம் அரசு தொடக்க பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல்?

செய்திப்பிரிவு

ஆலங்காயம்: ஆலங்காயம் அருகே அரசுப் பள்ளியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி தலைமை ஆசிரியரை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 125-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள காலி இடங்களில் விலை உயர்ந்த தேக்கு, சவுக்கு, வேப்ப மரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த பொதுமக்கள் பள்ளிக்கு சென்று பார்த்தபோது, அங்கு மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டு மரக்கிளைகள் சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே, பள்ளி தலைமை ஆசிரியர் துரையின் அறைக்கு சென்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, அவரிடம் முறையான பதில் இல்லை எனக்கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொது மக்கள், பள்ளி தலைமை ஆசிரியர் துரையை சிறைபிடித்து அவரது அறை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் சித்ரா மற்றும் ஆலங்காயம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஆலங்காயம் காவல் நிலையம் மற்றும் வட்டார கல்வி அலுவலர் சித்ராவிடம், அப்பகுதி மக்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், ‘‘கடந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை பள்ளி தலைமை ஆசிரியர் துரை என்பவர் யாரிடமும் அனுமதி பெறாமல் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரங்களை வெட்டி பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரின் துணையோடு கடத்தியுள்ளார். எனவே, இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர்.

மனுவை பெற்ற வட்டார கல்வி அலுவலர் சித்ரா, இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்படும் என்றார். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட விவகாரத்தில் ஆலங்காயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT