புதுச்சேரியில் சோதனை நடைபெறும் மருத்துவக் கல்லூரி வளாகம். 
தமிழகம்

புதுச்சேரி | திமுக எம்.பி. ஜெகரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் வருமான வரித் துறை சோதனை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி க்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அகரம் கிராமத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி உள்ளது. இன்று விடியற்காலை 2 மணியளவில் சென்னை மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையைச் சேர்ந்த 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கல்லூரி நிர்வாகக் கட்டிடம், மருத்துவமனை நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் யாரையும் வெளியில் அனுப்பவில்லை, மேலும் காலை 6 மணி ஷிப்டுக்கு வந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களை உள்ளே அனுமதிக்க வில்லை.

மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லக்கூடிய நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். தொடர்ந்து 8 மணிக்கு மேல் வந்த நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் உள்ளே அனுமதிக்காததால் வாயிலில் காத்திருந்தார்கள். பிறகு 9.30 க்கு மேல் அடையாள அட்டையை பரிசோதித்த பின்பு மருத்துவ மாணவர்களையும், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களையும் உள்ளே அனுமதித்தனர்.

ஜெகத்ரட்சகன் எம்.பியின் சொந்த ஊர் புதுச்சேரியையொட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் கலிங்கமலையில் உள்ளது. இவருக்கு புதுச்சேரியில் நட்சத்திர விடுதிகள், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இருப்பினும் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது. இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை பின்னணி: கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே அமலாக்கத் துறை சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அமைச்சர். அதேபோல் அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது திமுக எம்.பி. ஜெகரட்சகன் வீடு, சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT