கோவை: கோவையில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாபெரும் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது, அரங்கில் நுழைந்த நபர் ஒருவர், வங்கிக்கடனுதவி பெற விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என சப்தமிட்டார். இதையடுத்து, அந்த நபரை மேடைக்கு அழைத்துப் பேச வாய்ப்பு வழங்கிய மத்திய அமைச்சர், அவரது புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள்கூறும்போது, "கடன் வழங்கும்போது ‘சிபில் ஸ்கோர்’ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில், பலமுறை கோரிக்கை விடுத்தும் கடனுதவி வழங்கவில்லை என்று சதீஷ் என்பவர் பேசினார்.
ஏற்கெனவே பெற்ற கடனைசரியாக செலுத்தாததால் அவரது‘சிபில் ஸ்கோர்’ குறைவாக உள்ளது. எனவேதான் அவருக்குகடனுதவி மறுக்கப்பட்டுள்ளது. தன்னிடம் தவறை வைத்துக்கொண்டு, பெரிய விழாவில் இடைமறித்து சப்தமிட்டபோதும்,மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்நபரிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொண்டார்" என்றனர்.
விழாவில் முறையிட்ட சதீஷ்‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
மத்திய அமைச்சரிடம் முறையிட்ட பின்னர் மண்டல மேலாளர், என்னை அழைத்துப் பேசினார். இதுவரை நான் வங்கிக்கு பலமுறை சென்றபோதும் உயரதிகாரிகளாகிய நீங்கள் குறைகளைக் கேட்கவில்லை, தற்போதுதான் கேட்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர், என்னை மீண்டும் அழைத்துப் பேசுவதாக கூறினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.