கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை அருகே உள்ள மல்லப்புரம் மலைச் சாலையில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இவற்றை அகற்றாததால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. தேனி மாவட்டம், மயிலாடும் பாறையில் இருந்து மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டிக்கு 21 கி.மீ. தூரத்தில் மல்லப்புரம் மலைச் சாலை வழியாகச் செல்லும் வசதி உள்ளது. இதற்காக செங்குத்தான சரிவுகள், ராட்சத பாறைகளுக்கு இடையே 15 அடி சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மட்டுமே இந்த சாலை வழியாக அனுமதிக்கப்படுகின்றன.
பெரும்பாலும் மந்திச்சுனை, மூலக்கடை, மயிலாடும்பாறை, முத்தாலம்பாறை உள்ளிட்ட பகுதி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இந்த மலைச்சாலை வழியாக மதுரை மாவட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர்.
முறையாக சீரமைப்பு பணி மேற்கொள்ளாததால் சாலையின் பல இடங்கள் குண்டும், குழியுமாக உள்ளன. சமீபத்தில் பெய்த மழை யின்போது ராட்சத பாறைகள் சரிந்து சாலையில் விழுந்துள்ளன. இவற்றை அகற்றாததால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எதிரெதிரே வாகனங்கள் வரும்போது இந்த இடத்தை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, பாறைகளை அகற்றி வாகனங்கள் பாதுகாப்பாக பயணிப் பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், பாறை களை அகற்ற வனத்துறையினரிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் பாறைகள் அகற்றப்படும் என்றனர்.