திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி அருகே உள்ள திருப்பணிகரிசல் குளத்தைச் சேர்ந்தவர் சந்தியா (18). இவர் கடந்த 2 நாட்களுக்குமுன், பணி செய்யும் பேன்சி ஸ்டோர் கிட்டங்கியில் கொலை செய்யப்பட்டார்.
காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பணிகரிசல்குளம் ஊர் மக்களும், சந்தியாவின் உறவினர்களும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. சந்தியாவின் உடலையும் வாங்க மறுத்துவிட்டனர்.
வீடியோ வைரல்: இதனிடையே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முனைஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்வதற்குமுன், அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சந்தியாவை கொலை செய்த அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
போலீஸார் அவரை கைது செய்யும்போது, அவரது கழுத்தில் காயம் இருந்தது. அதுகுறித்து விசாரித்தபோது, தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.