விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் 133 குவாரிகளும் நாளை (அக்.4) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் குவாரிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி நடைசீட்டு வழங்கக் கோரி தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிசரர் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் விருதுநகரில் உள்ள மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் தங்க முனிய சாமியை இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, நடை அனுமதி சீட்டு வழங்க இன்னும் 5 நாள்கள் அவகாசம் தேவை எனக் கூறி அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. அதைடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகள் மற்றும் கிரசர்கள் நாளை (4-ம் தேதி) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலர் நாராயண பெருமள்சாமி கூறும்போது, “கடந்த 2019-ல் கரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் குவாரிகளும் இயங்கவில்லை. குவாரிகளின் குத்தகை காலத்தை நீட்டிப்பு செய்யக் கோரி நாமக்கல்லைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்க புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து, ஒன்றரை ஆண்டு காலம் குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டது. இதேபோன்று தமிழகம் முழுவதும் கரோனா காலத்தில் செயல்படாத குவாரிகளின் குத்தகை காலமும் நீட்டிக்கப்பட்டன. இதேபோல் விருதுநகர் மாவட்டத்திலும் 27 குவாரிகளுக்கு குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநர் தங்க முனியசாமி துறை ரீதியான தேர்வு எழுதாமல் முறைகேடாக பதவி உயர்வு பெற்று வந்துள்ளார். இதையறிந்த அப்போதைய ஆணையர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுக்க முற்பட்டார் என்ற காரணத்தால் அவர் வழங்கிய குவாரி குத்தகை கால நீட்டிப்பை நிறுத்திவைத்து கேடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு விருதுநகர் மாவட்டத்தில் 27 குவாரிகளின் உரிமத்தை தடை செய்தார்.
மேலும், இதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தவும், குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பையும் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வந்தார். இது தொடர்பாக கடந்த 20-ம் தேதி அவரிடம் முறையிட்டபோது தடை செய்யப்பட்ட 27 குவரிகளுக்கும் 10 நாள்களில் நடை அனுமதி சீட்டு வழங்குவதாகத் தெரிவித்தார். அதன்படி, இன்று வந்து நடை சீட்டு கேட்டபோது, இன்னும் 5 நாள்கள் வேண்டும் என தேவையற்ற காரணங்களைக் கூறினார்.
விருதுநகர் மாவட்டத்தில் இவர் பணியேற்ற நாளிலிருந்து கண்மாய்கள், ஆறுகள், குளங்களில் அதிக கனிமத் திருட்டு நடைபெறுகிறது. அதை இவர் கண்டும் காணாமல் இருந்து வருகிறார். ஆனால், நியாயமாக குவாரிகள் செயல்பட நடவடிக்கை எடுக்காமல் வேண்டும் என்றே எங்களுக்கு கேடுசெய்து வருகிறார். அவரது தவறான செயல்களைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் 133 குவாரிகளும் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.