சென்னை: காமராஜரின் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 48-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காமராஜரின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில்அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, மக்கள்தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழககாங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், சமத்துவ மக்கள்கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன், அமமுக சார்பில் ஜி.செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, விசிக சார்பில் இளஞ்சேகுவேரா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காமராஜரின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், ‘விடுதலைஇந்தியாவில் தொடக்கக் கல்விக்கான மிக வலிமையான அடித்தளத்தை தமிழகத்தில் அமைத்த முன்னோடி முதல்வரும், மிகச் சிறந்த காந்திய பற்றாளருமான பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளில், விடுதலைப் போராட்ட வீரராகவும், அரசியல் தலைவருமாக அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘கல்வி, விவசாயம்,சமூக மேம்பாடு என அனைத்து துறைகளிலும் தொலைநோக்கு திட்டங்களை தீட்டி புதிய தமிழகத்தை உருவாக்கிய சிற்பி காமராஜர். அவர் கட்டிய அணைகள்தான் இன்றும் தமிழகத்தில் விவசாயத்துக்கு உயிர்நாடி. அவரதுபுகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.
‘தொண்டு என்பதற்காக ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய ஏழைபங்காளர் காமராஜரின் அர்ப்பணிப்பை என்றென்றும் நினைவு கூர்வோம்’ என முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செல்வமும், ‘எளிமையான குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பாலும், தன்னலமற்ற நாட்டுப்பற்றாலும் நாடு போற்றும் நல்ல தலைவராக விளங்கிய காமராஜர் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.