தமிழகம்

புதுக்கோட்டை அருகே பாதிரியார் மீது பாலியல் புகார்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை அருகே கிறிஸ்தவ தேவாலயத்துடன்கூடிய பள்ளி விடுதியில் தங்கியிருந்த பெண் அங்கிருந்த பாதிரியார் மீது பாலியல் புகார் சுமத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர், ஜலஹள்ளியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், தனது பெற்றோர் இறந்துவிட்டதாகக் கூறி கடந்த 2013-ம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலய காப்பகத்தில் சேர்ந்தார். அங்கிருந்து சில மாதங்களில் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே விச்சூர் கிராமத்தில் உள்ள புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேவாலய விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்குள்ள விடுதியில் சமையல் வேலை செய்துவந்த இவர் கடந்த ஜூன் 19-ம் தேதி மாயமானார். இதுகுறித்து பாதிரியார் அளித்த புகாரின்பேரில் மணமேல்குடி காவல் நிலையத்தினர் 29-ம் தேதி வழக்குப்பதிந்து தேடிவந்தனர்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான இளம்பெண், தான் தங்கியிருந்த விச்சூர் தேவாலய விடுதியில் பாதிரியார் ஜெரோம் ஆரோக்கியராஜ் தனக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்ததாலேயே தான் அங்கிருந்து வெளியேறியதாகவும், தான் இருக்கும் இடம் தெரிந்தால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்த நீதிபதி, அந்த இளம்பெண்ணுக்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவிட்டதோடு இவ்வழக்கில் அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் 4-ம் தேதி ஆஜராகி விளக்கத்தை தெரிவிக்கலாமென உத்தரவிட்டார்.

அதன்படி அறந்தாங்கி நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் 4-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, இளம்பெண்ணின் பெற்றோர் என இருவர் வழக்கறிஞர்களுடன் ஆஜராகினர். இதுகுறித்து இளம்பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிபதி, இளம்பெண்ணின் விருப்பத்தின்படி அவரது வழக்கறிஞர் ராஜேஸ்கண்ணனுடன் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து இளம்பெண் கூறியது: “நான் பெங்களூரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனது பெற்றோர் இறந்துவிட்டனர். உறவினர் வீட்டில் சில ஆண்டுகள் தங்கி இருந்து ஒரு கால்சென்டரில் வேலை பார்த்து வந்தேன்.

அப்போது, என்னை கட்டாயப்படுத்தி ஒருவருடன் திருமணம் செய்துவைக்க முயன்றனர். எனக்கு விருப்பம் இல்லாததால் அங்கிருந்து தஞ்சாவூர் கிறிஸ்தவ காப்பகத்துக்கு கடந்த ஆண்டு வந்தேன். பின்னர் அங்கிருந்து விச்சூரில் பள்ளியுடன் இணைந்துள்ள தேவாலயத்துக்கு மாற்றப்பட்டேன்.

அங்கு சமையல் வேலை செய்துவந்தேன். தேவாலய விடுதியில் தங்கி இருந்த பாதிரியார் இரவு நேரங்களில் அசைவ உணவு சமைத்துக்கொடுக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவார். அவரது நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவார். அந்தப் பாட்டில்களை நானே அப்புறப்படுத்த வேண்டும். தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லைகளும் கொடுத்துவந்தார். இந்த தொல்லை தாங்கமுடியாமல் வேறு வழிதெரியாமல் தப்பித்து ஓடினேன்.

பின்னர் ஒரு நண்பர் மூலம் வழக்கறிஞரை சந்தித்து நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். எனது பெற்றோர் என்று உரிமை கொண்டாடியவர்கள் பாதிரியாரால் அனுப்பப்பட்ட வர்கள்தானே தவிர அவர்கள் எனது பெற்றோர் அல்ல” என்றார்.

இதுகுறித்து பாதிரியார் ஜெரோம் ஆரோக்கியதாஸ் கூறியது:

“புகார் கூறும் இளம்பெண் இந்த தேவாலய விடுதியில் தனியாக தங்கி இருக்கவில்லை. பல முதியவர்களுடன் தான் தங்கி இருந்தார். இரவில் 9 மணிக்கு மேல் தேவாலய விடுதியில் எந்த பெண்களும் தங்காமல் பள்ளி விடுதிக்கு சென்றுவிடுவார்கள். நான் மட்டுமே விடுதியில் இருப்பேன். அந்தப் பெண் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. அந்தப் பெண் ஒருவருடன் பழகிவந்ததோடு அவரோடு தலைமறைவாகவும் முயன்றார். பின்னர் நாங்கள் கண்டித்து தங்க வைத்தோம். மீண்டும் இங்கு இருக்கப் பிடிக்காமல் சென்று இருக்கலாம். அதற்காக எங்கள் மீது குற்றம் சுமத்தத் தேவையில்லை” என்றார்.

மணமேல்குடி காவல் ஆய்வாளர் உதயச்சந்திரன் கூறியபோது, “இளம்பெண் அளித்த புகார் குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT