ஈரோடு: ஈரோடு பழையபாளையத்தில் சக்திதேவி அறக்கட்டளை சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். சக்தி தேவி அறக்கட்டளை அறங்காவலர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி, மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) முருகேசன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு பங்கேற்று, 150 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும்2 செட் சீருடைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வெ.இறையன்பு பேசும்போது, ``ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலா நட்பு வாகனங்களைத் தொடங்கி, நலவாரியத்தில் இணைக்க வலியுறுத்தினேன். ஒரு வாரத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 100 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி வழங்கி, திறன் பயிற்சி அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் பெண்கள், பெண் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக இருக்கும்'' என்றார்.
நிகழ்ச்சியில், முக்கியப் பிரமுகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி தேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.