சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து. மோகனூர் காந்தமலை முருகன் கோயிலுக்குக் காவடி எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 
தமிழகம்

மோகனூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: காவடி எடுத்து விவசாயிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

நாமக்கல்: மோகனூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காந்தமலை முருகன் கோயிலுக்கு விவசாயிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் காவடி எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சிப்காட் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதற்காக நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிப்காட் அமைக்க அப்பகுதி விவசாயிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று திரளான விவசாயிகள் மோகனூர் காவிரி ஆற்றில் நீராடி அங்கிருந்து காவடிகளை சுமந்து சுமார் 3 கிமீ நடை பயணமாக, மோகனூர் காந்தமலை பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சென்றனர். அங்கு சுவாமிக்கு, பால், பன்னீர் புஷ்பம், இளநீர் மற்றும் நறுமண திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்து சிப்காட் அமையக் கூடாது என வேண்டினர்.

மேலும், கோயிலுக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பால சுப்பிரமணி, கொமதேக ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், சிப்காட் எதிர்ப்புக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT