சென்னை: அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காத தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து செப்.5-ம்தேதி அதிமுகசார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பொது சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
5-வது மண்டலத்தில் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. குடிநீர் இணைப்புகள் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அதிமுக ஆட்சியில் லாரிகள் மூலம்வழங்கப்பட்டு வந்த குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக பெண்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். மாடம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் அறிவித்தும், இன்னும் பணிகள் தொடங்கப்படவே இல்லை. சேலையூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் சரிவர முடிக்கப்படவில்லை.
இந்நிலையில், சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சினை, தெரு விளக்குகள் எரியாமை, பாதாள சாக்கடை திட்டத்தை முடிக்காதது, குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்யாதது, ஏரிகளில் கழிவுநீர் கலப்பது முதலானவற்றை சரிசெய்யத் தவறிய தாம்பரம் மாநகராட்சியை கண்டித்தும், அம்மாஉணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தைக் குறைத்து,இத்திட்டத்துக்கு மூடுவிழா காணத் துடிக்கும் திமுக அரசைகண்டித்தும் செங்கல்பட்டு மேற்குமாவட்ட அதிமுக சார்பில் வரும்அக்.5-ம் தேதி காலை 10 மணிக்கு தாம்பரம் வால்மீகி தெரு - ஏரிக்கரைதெரு சந்திப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கட்சியின் மகளிரணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.