படப்பை: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் அமணம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. ஒரத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து அமணம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்ல இணைப்புக் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மழைக் காலத்தில் இந்த இணைப்பு கால்வாய் மூலம் அமணம்பாக்கம் ஏரிக்கு அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இதனால் ஏரி விரைவாக நிரம்புகிறது.
இந்நிலையில், இந்த ஏரியை ஆக்கிரமித்து 200-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு வீடுகளைத் தண்ணீர் சூழ்வதால் ஏரிக்கரையை மர்ம நபர்கள் அடிக்கடி உடைத்து சேதப்படுத்தி நீரை வெளியேற்றுகின்றனர்.
கடந்த ஆண்டு உடைக்கப்பட்ட கரையை குன்றத்தூர் ஒன்றிய நிர்வாகத்தினர் மண் மூட்டைகளை அடுக்கி சரிசெய்த நிலையில், தற்போது இந்த இடத்தை மர்ம நபர்கள் மீண்டும் உடைத்து விட்டுள்ளதால், ஏரியில் உள்ள நீர் மற்றும் ஏரிக்கு வரும் நீர் அனைத்தும் உடைப்பு வழியே வெளியேறி அருகே உள்ள அடையாறு கிளை கால்வாயில் சென்று வீணாக வெளியேறுகிறது.
அமணம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த ஏரியை தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தினால், அதிக அளவு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே உடைக்கப்பட்ட ஏரிக்கரையை சீரமைப்பது யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நீர்வள ஆதாரத் துறையிடம் கேட்கும்போது, “எங்களுக்கு அந்தஏரிக்கும் சம்பந்தம் இல்லை, குன்றத்தூர் ஒன்றிய நிர்வாகம் தான் இதைசீரமைக்க வேண்டும்” என்கிறார்கள். ஆனால், குன்றத்தூர் ஒன்றியநிர்வாகத்தினர், “எங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை, நீர்வளஆதாரத் துறைதான் இதைச் சீரமைக்க வேண்டும்’ என்கிறார்கள்.
பல லட்சம் லிட்டர் மழைநீர் அடையார் ஆறு வழியாக கடலில் வீணாகக் கலப்பதால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடைந்த ஏரிக்கரையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.