காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நீர்நிலைகளைப் பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு மேற்கொண்டு, 3 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உள்ளதாக, ஆய்வுக்குழு தலைவர் மச்சேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 433 நாட்களாக விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பு குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், நீர்நிலைகள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில். இதை ஆராய, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு 2-வது முறையாக இப்பகுதிகளை ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 130-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான குழுவினர் பரந்தூர், வளத்தூர், அக்கமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்தனர்.
பின்னர், மச்சேந்திரநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீர்நிலைகள் பாதிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது, 2-வது முறையாக இதை ஆய்வு செய்ய வந்துள்ளோம். நீர்நிலைகளைப் பாதிக்காத வகையில், திட்டத்தைச் செயல்படுத்த இயலுமா என்பது முக்கிய நோக்கமாக உள்ளது. பாதிப்பு இருந்தால் அதை நிவர்த்தி செய்வது குறித்து, வல்லுநர் குழுக்கள் ஆய்வு செய்ய உள்ளன.
மேலும், இதற்கான ஆய்வு அறிக்கை இன்னும்3 அல்லது 4 வாரங்களுக்குள் அரசுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க எங்கள் குழுவையோ மாவட்ட நிர்வாகத்தையோ எளிதில் அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்பி சுதாகர், மாவட்ட வருவாய்அலுவலர் வெங்கடேஷ், பயிற்சி ஆட்சியர் சங்கீதா,ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.