ஹாக்கி போட்டிகளுக்கு கோவில்பட்டி எவ்வாறு பெயர் பெற்றுள்ளதோ, அதேபோன்று கூடைப்பந்து என்றவுடன் தமிழகத்தில் கோவைதான் முக்கியத்துவம் பெறுகிறது. மற்ற நகரங்களைக் காட்டிலும் கூடைப்பந்து விளையாட்டுக்கு கோவை இளைஞர்களிடம் உள்ள ஆர்வம், இப்போட்டியை உயிர்ப்புடன் எடுத்துச் சென்று வருகிறது.
இதனால்தான், கோவையில் பிரபலமான பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனம் வேறு எந்த விளையாட்டுக்கும் வழங்காத முக்கியத்துவத்தை கூடைப்பந்துப் போட்டிக்கு வழங்கி 50-வது ஆண்டாக அகில இந்திய கூடைப்பந்துப் போட்டிகளை ஜுலை 25-ம் தேதி முதல் நடத்த உள்ளது.
நாட்டிலேயே ஒரு கல்வி நிறுவனம், தொடர்ந்து அகில இந்திய அளவிலான போட்டியை நடத்தி பொன்விழா கொண்டாடுகிறது என்றால் அது இங்குதான். கூடைப்பந்துப் போட்டியில் ஏராளமான திறமைமிக்க இளைஞர்களை கோவை வார்த்து எடுத்துள்ளது.
இதில் மிகப்பெரிய துரதிருஷ்டம் என்னவெனில் இப்போட்டிக்கு சரியான வசதிகள் இங்கு இல்லை என்பதுதான். கூடைப்பந்து போட்டியில் சிறந்து விளங்கிய பலர் இப்போட்டியை தொழிலாகவும், உயிராகவும் வாழ்க்கை முழுவதும் எடுத்துச் செல்ல முடியாமல் மனதில் மட்டும் கூடைப்பந்து போட்டியின் நினைவுகளைப் பதித்துக் கொண்டு சென்றுவிடுகின்றனர்.
அதனால்தான், இங்குள்ள வீரர்களிடம் ரத்தத்திலேயே கூடைப்பந்தாட்ட உணர்வுகள் கலந்து இருந்தாலும், அகில உலக அளவில் ஒரு வீரர் கூட ஜொலிக்கவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
இருப்பினும், என்றாவது ஒருநாள் கூடைப்பந்து போட்டியில் தேசிய அளவிலும், உலக அளவிலும் கோவை நகர மைந்தர்கள் தடம் பதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு டிராஃபி நடத்தப்படுகிறது என்றால் அது இங்குதான். இந்த டிராஃபி குறித்து கோவையின் முன்னாள் கூடைப்பந்து போட்டி வீரரும், பி.எஸ்.ஜி. விளையாட்டு சங்கத்தின் செயலாளருமான டி.பழனிச்சாமி கூறியதாவது:
1962-ம் ஆண்டு முதல் அகில இந்திய அளவிலான போட்டிகள் கோவையில் நடத்தப்படுகின்றன. பி.எஸ்.ஜி. அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரான ஜி.ஆர்.தாமோதரன் இந்த டிராஃபி உருவாக முக்கிய காரணகர்த்தா ஆவார். தொடக்கத்தில் 108 அணிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. அப்போது நாக்-அவுட் அடிப்படையில் இரவு, பகலாகப் போட்டிகள் 10 நாள்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும். இப்போட்டிகளைப் பார்க்க பெண்கள்கூட ஆர்வமாக மைதானத்திற்கு வருவார்கள். அவ்வளவு பிரசித்தி பெற்றது.
பின்னர் படிப்படியாக அணிகளின் எண்ணிக்கையைக் குறைத்து மிகத் திறமை வாய்ந்த அகில இந்திய அளவிலான அணிகளை மட்டுமே கொண்டு 2004 முதல் போட்டி நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, தற்போது, இந்தியாவின் மிகச்சிறந்த 8 அணிகளைக் கொண்டு லீக் முறையில் 6 நாள்கள் டிராஃபி நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் கிடைத்த அங்கீகாரத்தால் கடந்த காலங்களில் எண்ணற்ற வீரர்கள் உருவாகினர்.
அவர்களில் சிலர்தான் பி.கே.நாராயணசாமி, ஜெகநாதன், கணபதி, ராமமூர்த்தி, புருஷோத்தமன், பழனிசாமி. ஆனால், சிலர் விளையாட்டுப் போட்டி பயிற்றுநராகவும், பலர் வாழ்க்கைத் தொழிலுக்காகவும் சென்றுவிட்டனர். கூடைப்பந் தாட்டப் போட்டிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்காததே இதற்கு காரணம். பல ஆண்டு கோரிக்கையான கூடைப்பந்துப் போட்டிக்கு உள்விளையாட்டு மைதானம்கூட அமைத்துத் தரவில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூடைப்பந்தாட்ட ஆர்வலர்கள் மூலம் உள்விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் சூழல் உருவானது. அப்போதைய முதல்வர் கருணாநிதிதான், நேரு மைதானத்திற்கு எதிரில் கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், அப்போதைய அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி காட்டிய எதிர்ப்பே இன்றளவும் உள்விளையாட்டு மைதானம் கிடைக்காததற்குக் காரணம் ஆகும்.
அதனால்தான், அகில இந்திய டிராஃபிகளை தொடர்ந்து நடத்தவும், உலக அளவில் வீரர்களை உருவாக்கவும் முடியவில்லை. இருப்பினும், கோவை மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் தற்போது 10 ஆண்டுகள் அடிப்படையில் இடம் ஒதுக்கி உள்விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு முன்வந்துள்ளது.
ஆனால், நிரந்தரமாக ஒரு மைதானம் கிடைக்கவில்லை என்பது எங்களின் வேதனை. மற்றொன்று, கூடைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கொடுக்காதது. இதனால், ஏராளமான திறமை மிகுந்த வீரர்கள் வாழ்க்கை ஓட்டத்தில் கரைந்து போய்விட்டனர். இப்பிரச்சினைகள் களையப்படு மானால் கூடைப்பந்து போட்டியில் உலக அளவில் இங்கிருந்து வீரர்கள் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.