சென்னை: தமிழகத்தில் இன்று 1,000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழகத்தில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 2,972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினமும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் விவரங்கள் கிராமம், நகரம் வாரியாக தொகுக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் நோய்த் தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 23,717 தினசரி தற்காலிகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதால், மாவட்ட அளவில் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிர் காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள் பரிசோதனைக் கருவிகள், ரத்தக் கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்புவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள், டயர், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றன. பொது கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், டெங்குவுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் கூடுதல் வார்டு அமைக்கப்படும்.
மழைக்காலங்களில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி, டெங்கு,மலேரியா நோய்கள் பரவாமல் இருக்க கொசுப் புழு உற்பத்தியாகும் இடங்களை அடியோடுஅகற்றும் வகையில், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 363 பேர் சிகிச்சை பெறுகின்றனர். சென்னையில் மட்டும் 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அக்.1-ம் தேதி (இன்று) தமிழகத்தில் ஒரே நாளில் 1,000 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னையில் நடைபெறும் முகாமை நானும், துறைச் செயலரும் தொடங்கி வைக்கிறோம். தொடர்ந்து இதுபோன்றமுகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.