தமிழகம்

பாஜகவுக்கு செல்ல இருப்பதாக பரப்பப்பட்ட வதந்தி - ட்விட்டர் ஹேஷ்டேக் மூலம் எஸ்.பி.வேலுமணி பதில்

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜக செல்ல இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஹேஷ்டேக் மற்றும் புகைப்படம் மூலம் அவர் பதில் அளித்துள்ளார்.

அதிமுக, 2019 மக்களவை தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தமிழகத்தில், தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாகவும் இரு கட்சிகளும் கூறி வந்த நிலையில், 2022-ம்ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன. அன்றிலிருந்தே கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. அப்போதே இக்கூட்டணி முறியும் எனவும் கணிக்கப்பட்ட நிலையில் இப்போது கூட்டணி முறிந்துள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்து வருவதால், கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், ‘‘ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை விமர்சித்தவுடன் கூட்டணி முறிவு ஏற்படவில்லை. 4 நாட்கள் கழித்து 2026 தேர்தலில் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது, தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று அண்ணாமலை அறிவித்தபோதுதான், கூட்டணி முறிவு அறிவிப்பை பழனிசாமி வெளியிடுகிறார்’’ என்றார்.

மாறுபட்ட தகவல்கள்: ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுவரும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பாஜகவின் மத்திய முகமை சோதனைகளுக்குப் பயந்து, பாஜகவுடன் கூட்டணி வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாகவும், ஊழல் வழக்கை எதிர்கொள்ளாத ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கூட்டணியை முறித்த பழனிசாமிக்கு தக்க பாடம் புகட்ட, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக ஆட்சி அமைத்ததுபோல, ஊழல் வழக்கை எதிர்கொண்டிருக்கும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவை உடைக்க பாஜக திட்டமிட்டிருப்பதாகவும், எஸ்.பி.வேலுமணி தனது பல்வேறு மாவட்ட ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக தகவல் பரவின.

‘என்றென்றும் அதிமுககாரன்’: இந்நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக,எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர்பக்கத்தில் ‘#என்றென்றும்_அதிமுககாரன்' என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு, தொடக்க காலத்தில் அதிமுக கொடியுடன் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது அதிமுக மற்றும் பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT