புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரி அமைச்சர் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பி்ல் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவிவிசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு: இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம்தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாகமுன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதி மாற்றம்: இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளார்.
இந்நிலையில் தனக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரியும், இடைக்காலத் தடை கோரியும் அமைச்சர் பொன்முடி தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.