சென்னை: மின்கட்டணம் உயர்வு தொடர்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விடுத்த 5 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.
உயர்த்தப்பட்ட 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்ப பெறவேண்டும், பீக் அவர் கட்டணம் ரத்துசெய்தல், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், பல்முனை ஆண்டு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்தல் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க வேண்டும், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பிஅட்டவணைக்குப் பதிலாக 3-ஏ1என்ற அட்டவணைக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தமிழகம் முழுவதும் கடந்த 25-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதையடுத்து, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு தமிழக முதல்வர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சரிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, தமிழக சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கிண்டியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் தொழிற் சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு, அமைச்சர்கள் கொண்டு சென்றனர்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மின்வாரியம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ1 என்ற பழைய அட்டவணைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஒருயூனிட்டுக்கு ரூ.7.65 ஆக வசூலிக்கப்பட்ட மின்கட்டணம் ரூ.4.60 ஆக குறையும்.
இதன் மூலம், 5 கோரிக்கைகளில்ஒரு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே சமயம், உயர்த்தப்பட்ட 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பீக் அவர் கட்டணம் ரத்து செய்தல், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.
பல்முனை ஆண்டு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்தல் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை என தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.