சென்னை: பாஜக மாநில அலுவலக ஊழியர் வீட்டில் நடந்த சோதனை குறித்து பொதுமக்களுக்கு அமலாக்கத் துறை மற்றும் பாஜக விளக்கமளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக மாநில தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக் குமார் வீட்டில் கடந்த 27-ம் தேதி, காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது. ஆனால் இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத் துறையோ, பாஜகவோ இதுவரை வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் அமலாக்கத் துறையின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது.
மேலும் சோதனையின் போது, பாஜகவின் தென் சென்னை மாவட்ட தலைவர்கள் மிக சாதாரணமாக சோதனை நடக்கும் இடத்துக்கு வருவதும், வெளியே வந்து தொலைபேசியில் பேசுவதுமாக இருப்பதற்கு எப்படி அனுமதிக்கப்பட்டார்கள், அதேபோல பாஜக தலைமை அலுவலக ஊழியர் வீட்டில் 5 மணி நேரம் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன, மேலிடத்தில் பாஜக நிர்வாகிகள் தொடர்பு கொண்டு சோதனையை நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதால் அமலாக்கத் துறை நிறுத்திவிட்டதாக சொல்வதும் உண்மையா?
சாதாரணமாக அமலாக்கத் துறையின் சோதனைகள் மற்றும் அது தொடர்பான விபரங்கள் பெரிய அளவில் பேசப்படுவது வழக்கம். ஆனால், இச்சோதனை மூடி மறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கேள்விகளுக்கு அமலாக்கத் துறையும், பாஜகவும் பொது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.