சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைத்தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
முன்னதாக, சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கிய பேரணிக்கு, கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது: கர்நாடகாவை ஆள்வது காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பாஜக அரசாக இருந்தாலும், தமிழர்களை வஞ்சிக் கின்றன. தற்போது, தமிழர்களுக்கு துரோகம் செய்கின்ற கர்நாடக அரசுக்கு, மத்திய பாஜக அரசு ஆதரவாக இருக்கிறது. கன்னட அமைப்பினர், தமிழக முதல்வரை அவமதித்துள்ளனர்.
தமிழக திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறுகின்றனர். இத்தகைய அராஜகத்தில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டால், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதற்கான எதிர் வினையாற்றும்.
எனவே, மத்திய அரசு கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு, இந்திய ராணுவத்தை அனுப்பி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டு, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு உரியதண்ணீரைத் திறந்துவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்ற 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். இந்தப் பேரணியால் சைதாப்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.