சென்னை: தண்டையார்பேட்டை மண்டலம், 44-வது வார்டு, பெரம்பூர் காமராஜ் நகரில் ரூ.2.90 கோடியில் புதியதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, அமைச்சர் பி.கே.சேகர் பாபு முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக தாமதப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை ஒரு வாரத்தில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பருவ மழைக்கு முன்னதாக சாலைப்பணிகள் மற்றும் சாலை சீரமைக்கும் பணிகள் தரமாகவும், விரைவாகவும் நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சிப் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம், சென்னை மெட்ரோ ரயில், மின்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைத் துறையிலும் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி அத்துறைகளை ஒருங்கிணைத்து சாலை அமைக்கும் பணிகள் விரைவாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளிலும் போதுமான அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. எனவே, சென்னைக்கு குடிநீர் தடுப்பாடு வராது. இவ்வாறு அவர் கூறினார் இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, வடசென்னை எம்.பி.கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ-க்கள் ஆர்.டி.சேகர், கே.பி.சங்கர், எஸ்.சுதர்சனம், துணை மேயர் மு.மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.