சென்னை: மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், சென்னை - தேனாம்பேட்டை, ரத்னா நகரில் உள்ள அவரது இல்லத்தில் செப்டம்பர் 28 காலை 11.20 மணி அளவில் காலமானார். அவரது உடல் அன்றைய தினம், அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான அரசியல் தலைவர்கள், வேளாண்மை, சுற்றுச்சூழல், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இன்று காலை அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் நண்பகலில் எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 16 காவலர்கள் மரியாதை நிகழ்வில் பங்கேற்றனர். இவர்களில் 10 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட காவல் துறை மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக, நேற்று காலை முதல் அவரது உடல், அவரால் தொடங்கப்பட்ட சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது, எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் சவுமியா சுவாமிநாதன் உடனிருந்தார்.
தொடர்ந்து, கேரள மாநில அரசின் வேளாண் அமைச்சர் பி.பிரசாத், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.