சேலம்: அசுர வேகத்தில் ஏர் ஹாரனை அலறவிட்டபடி செல்லும் பேருந்துகளால் விபத்து, உயிரிழப்பு அபாயம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க சட்டதிட்டங்களை கடுமையாக்கி விபத்தில்லா பயணத்துக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த குமரேசன் (42) என்பவர் சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபோன்று தினமும் பல உயிர்களை பேருந்துகள் தங்களது அசுர வேக பயணத்தால் பறித்துச் செல்கின்றன. இதனால், உயிரிழப்பவர்களின் ஒட்டு மொத்த குடும்பத்தினரின் எதிர்கால வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகி வருகிறது.
“தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் உரிமையாளருக்கு வருவாயை ஈட்டிக் கொடுக்கும் நோக்கத்துடன் முன்னால் செல்லும் பேருந்துகளை முந்திச் செல்வதில் போட்டி போடுவதாலே, அப்பாவி மக்கள் தங்களின் இன்னுயிரை இழக்கின்றனர். இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளது” என்கின்றனர் பொதுமக்கள்.
சட்டம் என்ன சொல்கிறது? இதுகுறித்து சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறியது: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கனரக வாகனங்களை ஆய்வுக்கு கொண்டு வரும் போது, அதில் 80 கிமீ வேகம் செல்லும் வகையில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே தரச்சான்று வழங்கப்படுகிறது.
சில தனியார் பேருந்துகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவி இணைப்பை துண்டித்து விட்டும், அதனை கழற்றி வைத்து விட்டும் இயக்குவது உண்டு. இதுபோன்ற வாகனங்கள் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆய்வின் போது பிடிபடும் நிலையில் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், தங்களது தார்மீக பொறுப்பை உணர்ந்து கட்டுப்பாடான வேகத்தில் சென்றால் விபத்து, உயிரிழப்புகளை தடுக்கலாம்.
அதேபோல, தனியார் பேருந்துகளில் மியூசிக்கல் ஹாரன்களை அலறவிடுவது சாலையில் செல்பவர்களை பதைபதைக்க வைக்கிறது. கனரக வாகனங்களில் அதிகபட்சமாக 85 டெசிபல் முதல் 90 டெசிபல் வரையிலான ஒலி அளவீடுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை மிஞ்சும் வகையிலான ஹாரன்களால் முதலில் பாதிக்கப்படுவது, அதனை பயன்படுத்தும் பேருந்து ஓட்டுநர்கள் தான் என்பதை அறிய வேண்டும். அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து, பேருந்துகளில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்தும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘டைமிங்’ பிரச்சினை: இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: தனியார் பேருந்துகள் அதிகப்படியான வேகத்துடன் செல்வதற்கு முக்கிய காரணமாக ‘டைமிங்’ பிரச்சினை உள்ளது என்பதே நிதர்சனம். கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக பேருந்துகளுக்கு ‘பர்மிட்’ வழங்கும் போது, அக்காலக்கட்டத்தில் இருந்த வாகன பெருக்கம், சாலையில் போக்குவரத்து நெரிசல், பேருந்து நிறுத்துமிடம், சாலை வசதிகளை கொண்டு நேரம் நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பேருந்து நிலையத் துக்குள் பேருந்து வராமல் நேரம் கடந்து வந்தால் பேருந்து நிலையத்தில் இருந்து அடுத்த ‘ட்ரிப்’க்கான அனுமதியை ‘டைமிங் அலுவலர்’ மறுத்துவிடுவார்.
இதனால், ஓட்டுநர், நடத்துநர்கள் உரிமையாளர்களிடம் பதில் கூற வேண்டிய கட்டாயமும், அவர்களின் வருமானத்தில் பிடித்தம் செய்யும் நிலையும் உண்டு. இந்நிலையில், இன்றைய காலக்கட்டத்தில், வாகன பெருக்கம், அதிகப்படியான பேருந்து நிறுத்துமிடம், சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் குறித்த நேரத்துக்குள் செல்ல பேருந்துகளை வேகமாக இயக்குவதால் விபத்து, உயிரிழப்பு சாதாரணமாகியுள்ளது.
மேலும், பேருந்து நிறுத்துமிடங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போட்டியில் தனியார் பேருந்துகள் முந்திச் செல்லும்போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பயணிகளை பயமுறுத்தும் சம்பவங்களும் நடக்கிறது. இதுதொடர்பாக ஓட்டுநர்கள் மீது சட்டரீதியாக வழக்குப் பதிவு செய்தாலும், அபராதத்தை எளிதாக செலுத்தி விட்டு தப்பி விடுகின்றனர்.
இன்றைய சூழலுக்கு ஏற்ப போக்குவரத்து சட்டத்திட்டங்களை கடுமையாக மாற்றுவதன் மூலமாகவும், டைமிங் பிரச்சினைக்கு தீர்வு காண்பது உள்ளிட்டவற்றின் மூலமாகவும் விபத்து சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியும், என்றனர்.
அரசுப் பணியில் வேகம் வேண்டும்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறும்போது, ‘சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு சாலை விதிமுறைகளை கடைபிடித்தே தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிலநேரங்களில் சாலைப்பணிக்காக குழி தோண்டுவதால் மாற்றுப்பாதையில் பேருந்துகள் திருப்பிவிடும் நிலை ஏற்படும்போது நேரம் போதாமல் ஓட்டுநர்கள் வேகமாக செல்ல வேண்டியுள்ளது.
ஏர் ஹாரன் உள்ளிட்டவற்றை பெரும்பாலும் தனியார் பேருந்துகள் பயன்படுத்துவது கிடையாது. ஏதோ ஒரு சில பேருந்துகளில் பயன்படுத்துவதால், ஒட்டு மொத்தமாக குற்றம்சாட்டி விட முடியாது. சாலை வசதிகளை மேம்படுத்துவதன் மூலமாகவும், குறுக்கிடும் பாலப்பணி, பாதாள சாக்கடை பணி போன்ற உட்கட்டமைப்பு விரிவாக்கத்தை அரசு விரைந்து முடிப்பதன் மூலமாகவும் தேவையில்லாத விபத்து சம்பவங்களை தடுக்க முடியும். சாலை விபத்துகளை தடுக்க தனியார் பேருந்துகள் மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளின் சீரிய நடவடிக்கை, சாலைபோக்குவரத்தில் மக்களிடம் விழிப்புணர்வு போன்றவை அவசியம், என்றனர்.