தமிழகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரே உள்ள சுரங்கப்பாதை ஒரு மாதத்தில் திறப்பு: மெட்ரோ நிறுவனம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரே உள்ள சுரங்கப்பாதை ஒரு மாதத்தில் திறக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. .

‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 25-ம் தேதி ‘சட்டை காயப் போடலாம்.. மட்டையாகலாம்’ - பாதசாரிகளுக்கு உதவாத சுரங்கப்பாதை - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை எதிரேகாட்சி பொருளாய் நிற்கிறது’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.

‘சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரே மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நவீன சுரங்கப்பாதை கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. இதனால், பொலிவை இழந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படும் சுரங்கப்பாதை, இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. அதனால், இரவு நேரத்தில் பொதுமக்கள் இப்பகுதியை அச்சத்துடனேயே கடக்கவேண்டி உள்ளது. சுரங்கப்பாதையை விரைவில் திறந்து, அதன் இருபுறமும் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும்’ என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி முழுமையடைந்து வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை எளிதாக கடந்து செல்வதற்காக நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கி வசதிகளுடன் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த சுரங்கப்பாதையில் சில தொழில்நுட்ப பணிகளும் தற்போது நடந்து வருகின்றன.

இந்த தொழில்நுட்ப பணிகளுக்கு ஒவ்வொரு நிலையிலும், ஒருசில நாட்கள் தேவைப்படுகின்றன. மழைநீர் உட்புகாத வகையிலும், தேங்காத வகையிலும் அதற்கான வடிகால் வசதியும் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவலர் நியமனம்: இந்த சுரங்கப்பாதையை கண்காணிக்க காவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஏதேனும் சமூக விரோத செயல்கள், அத்துமீறல்கள், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எச்சரிக்கை: எனவே, இந்த சுரங்கப்பாதை பகுதியில் சமூகவிரோத செயல்களில் யாரும் ஈடுபட கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் உள்ள சுரங்கப்பாதை தொழில் நுட்ப பணிகள் முடிக்கப்பட்டு, ஒரு மாத காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT