சென்னை: மீன்வளத்துறை சார்பில் ரூ.71.60 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய, மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள், மின் விதைப் பண்ணை மற்றும் மாணவ, மாணவியர் விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனையில் ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம், தஞ்சாவூர் மாவட்டம் கீழத்தோட்டம் கிராமத்தில் ரூ.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்கு தளம், சேதுபாவாசத்திரம் மீனவ கிராமத்தில் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக நேற்று திறந்துவைத்தார்.
அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் ரூ.4.50 கோடி செலவில் மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் விதைப் பண்ணை, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிராமத்தில் ரூ.3.05 கோடியிலும், புதுக்குடி கிராமத்தில் ரூ.1.40 கோடியிலும் புதிய மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் என மொத்தம் ரூ. 56.95 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய, மேம்படுத்தப்பட்ட மீன்இறங்கு தளங்கள், விதைப்பண்ணை ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
மீன்வளப் பொறியியல் கல்லூரி: மேலும், ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின்நிதி உதவியுடன் தலா ரூ.7.30 கோடியில் 33 தங்கும் அறைகளுடன் சுமார் 110 மாணவர்கள், 110 மாணவிகள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள விடுதி கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் ந.கவுதமன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறையின் செயலர்மங்கத்ராம் சர்மா, மீன்வளத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி, மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) என்.பெலிக்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடியில் சுழல் நிதி உருவாக்கம்: மீன்வளத் துறை செயலர் மங்கத்ராம் சர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் எந்த வருமானமும் இன்றி வறுமைக்கோட்டுக்கு கீழ் செல்லும் நிலையில் உள்ளன. அவர்களின் துயர் துடைக்க சுழல் நிதியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
அந்த நிதியில் இருந்து காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த நிதியின் மூலம் அவர்கள் தங்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்திக் கொள்ள பேருதவியாக அமையும்.
அந்த வகையில், கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் நிவாரணம் வழங்க ரூ.50 லட்சமும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியை கொண்டு சுழல் நிதி உருவாக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.