சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் அக்.13 வரை 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அவருக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகையுடன் 3,000 பக்க ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ம் தேதி தாக்கல் செய்தனர்.
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கே அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் தெரிவித்ததால், வழக்கு மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 2-வது முறை தாக்கல் செய்யப்பட்ட மனுவை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததால், புழல் சிறையில் இருந்தவாறு காணொலி மூலமாக நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரது நீதிமன்ற காவலை அக்.13 வரை 7-வது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.