சென்னை: கன மழையால் சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். சென்னை மற்றும் புறநகரில் நேற்று மாலை கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடியுடன்கூடிய கன மழை பெய்தது. சைதாப்பேட்டையில் மழையின்போது, கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்துடன் பலர் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.
அப்போது, திடீரென பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்தது. மேற்கூரையின் அடியில் சிக்கிய சிலர் தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், ஓடிச் சென்று, மேற்கூரையின் அடியில் சிக்கி இருந்த சிலரை மீட்டனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மேற்கூரையின் அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 2 பேர் பெட்ரோல்பங்க் ஊழியர்கள். இதையடுத்து,அவர்களை அருகில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அவர்கள் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி(56) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரிந்து விழுந்த மேற்கூரையை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். விபத்து நடந்தபகுதியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.