தமிழகம்

குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள்: மக்கள் கல்விக் கூட்டியக்கம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மதுரை: தனியார் பள்ளி, கல்லூரிகளில் குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக மக்கள் கல்வி கூட்டியக்க நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். நியாயமான ஊதியம் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் கல்வி கூட்டியக்கம் சார்பில், மதுரை கே.கே.நகரில் நாளை (அக்.1) மாநில மாநாடு நடக்கிறது.

இதையொட்டி, மதுரையில் நேற்று அவ்வியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் கல்வியில் உச்சம் தொட்டு விட்டதாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களில் நிலையற்ற பணியில் குறைந்த ஊதியத்தில் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலை தற்போது அரசு பள்ளிகளிலும் ஏற்பட்டு வருகிறது. நிலையான பணி என்றால் அரசு விதிப்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பதால் அதை தவிர்க்க விரும்புகின்றனர்.

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பல லட்சம் லஞ்சம் கொடுத்தால் வேலை என்ற நிலை உள்ளது. அரசுப் பள்ளிகளில் 13,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பகுதிநேர ஊழியர்களாக சொற்ப ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர்.

7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். பல்கலைக்கழக மாநிலக்குழு (யுஜிசி) பரிந்துரைத்த ரூ. 57,700 ஊதியத்தை வழங்காமல் அவர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர். தனியார் பள்ளி, கல்லூரிகளில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், ஆசிரியர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்குகின்றனர்.

இதுபோன்ற நிலைக்கு தீர்வுகாண, மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட அமைப்புகள், இயக்கங்கள் இணைந்த மக்கள் கல்வி கூட்டியக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கான கோரிக்கை மாநாட்டை மதுரையில் நடத்துகிறோம். இம்மாநாட்டில் எம்பிக்கள் தொல். திருமாவளவன், சு. வெங்கடேசன் மற்றும் நீதிபதி அரி பரந்தாமன், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பங்கேற்று பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT