மேட்டூர்: மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 54 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 14 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 492 ஆண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பாதுகாப்பு பணிக்காக திருப்பூர், காங்கேயம், கோவை உள்ளிட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு பணிகள் முடிந்து மீண்டும் காவலர் பயிற்சி பள்ளிக்கு திரும்பிய 54 பயிற்சி காவலர்களுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதில் 14 பயிற்சி காவலர்கள் மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 40 பேர் காவலர் பயிற்சி பள்ளி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் காவலர் பயிற்சி பள்ளியில் முகாமிட்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காவலர் பயிற்சி பள்ளி மாணவர்களை மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மருத்துவமனையிலும், பயிற்சி பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று நலம் விசாரித்ததோடு மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "காவலர் பயிற்சி பள்ளியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 14 பேருக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு தீவிரமாக இருப்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரத்தம், டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது முடிவுகள் வந்த பிறகு டெங்கு காய்ச்சலா அல்லது சாதாரண காய்ச்சலா என்பது தெரியவரும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவரும் சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்" என்றனர்.