தமிழகம்

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 923 பாலியல் சம்பவங்கள்: பாதிக்கப்பட்டவர்களில் 65 சதவிதம் பேர் சிறுமிகள், குழந்தைகள்

செய்திப்பிரிவு

2013-ம் ஆண்டில் தமிழகத்தில் 923 பாலியல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 65 சதவிகிதம் பேர் சிறுமிகள் என்று ‘எவிடன்ஸ்’ ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் கடந்த 16.12.2012-ம் தேதி ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஜே.எஸ்.வர்மா கமிட்டி பல்வேறு பரிந்துரைகளைத் தெரிவித்தது. இதன் பிறகும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கடந்த மாதம் ஆய்வு நடத்திய மதுரை ‘எவிடன்ஸ்’ அமைப்பு அதன் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. 2013-ல் மட்டும் தமிழகத்தில் 923 பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 573 பெண்களின் சாதி, வயது உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி, தலித் பெண்களே மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் 65 சதவிகிதம் பேர் சிறுமிகள் மற்றும் குழந்தைகள். பெரும்பாலான பாலியல் வன்முறைகள், அதாவது 84 சதவீத சம்பவங்கள் கிராமங்களிலேயே நடந்துள்ளன.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 573 சம்பவங்களில் 285 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற விசாரணையில் 266 வழக்குகள் உள்ளன. 4 சம்பவங்கள் பொய்ப் புகார் என்று தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஒரு வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. 13 வழக்குகளின் நிலை குறித்து கண்டறியவே முடியவில்லை. இந்த வழக்குகளில் ஒருவருக்குக்கூட தண்டனை கிடைக்கவில்லை.

இதுகுறித்து எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் ஏ.கதிர் கூறியது:பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனை செய்வதுபோல, குற்றவாளியையும் 24 மணி நேரத்தில் கைது செய்து பரிசோதிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஒரு சம்பவம் கூட நிகழாதது, அவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது.

இந்த குற்றங்களை குறைக்க சில பரிந்துரைகளை அரசுக்கு தெரிவித்துள்ளோம். அதன்படி, பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் திருத்த சட்டம் 2013 பதிவு செய்யப்பட வேண்டும். அப்போது தான், மூன்றே மாதத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். குழந்தைகள் மீதான வன்முறையில் ஈடுபடுவர்களுக்கு ஓராண்டு வரை பிணை கிடையாது என்று அரசு அறிவிக்க வேண்டும்.

பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யாத, -முறையாக விசாரிக்காத போலீஸாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அதேபோல முறையாக மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யாத மருத்துவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு அரசு -ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காவல், நீதி, மருத்துவம், நிர்வாகம் என 4 துறைகளும் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி, சிகிச்சை, நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT