மதுரை: மதுரை மத்திய சிறை புதிய வளாகம் இடையபட்டியில் அமையவிருந்த நிலையில், பாலமேடு பகுதிக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.
தென் மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சிறைச் சாலையாக மதுரை மத்திய சிறை உள்ளது. மதுரை அரச ரடியில் இயங்கும் இச்சிறை வளாகம் 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 158 ஆண்டுகள் பழமையானது. இந்தச் சிறைச்சாலையில் அரசின் நிர்ணயப்படி சுமார் 1250-க்கும் மேற்பட்ட கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. ஆனால், 1600-க்கும் மேற்பட்டோர் தற்போது அடைக்கப் பட்டுள்ளனர். மேலும், இச்சிறை வளாகத்தில் செயல்படும் பெண்கள் சிறை யில் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனப் பெருக்கம் போன்ற காரணங்களால் மத்திய சிறை அமைந்துள்ள சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதனால், மதுரை மத்திய சிறையை புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, மத்திய சிறையை புறநகர் பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தது. இதன்படி, மதுரை - திரு வாதவூர் சாலையில் சுமார் 24 கிமீ. தூரத்திலுள்ள இடையபட்டி மலை அடிவாரப் பகுதியில் அமைக்க சுமார் 84 ஏக்கரை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்தது.
இந்த இடத்தில் ரூ.400 கோடியில் சென்னை புழல் சிறைக்கு இணையான வசதிகளுடன் பசுமை நிறைந்த சிறை வளாகத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி விசுவநாதன், சிறைத் துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி, தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டனர்.
இந்நிலையில், இடையபட்டியில் மத்திய சிறை அமையும் திட்டத்தை கைவிட மாவட்ட நிர்வாகம் முடிவெடுத் துள்ளது. இதன்படி, பாலமேடு அருகில் உள்ள தெத்தூர் கிராமத்துக்கு மத்திய சிறையை மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. இது மதுரையிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இடையபட்டியையொட்டிய மலைப் பகுதியில் முள்ளெலி, தேவாங்கு, உடும்பு, புள்ளிமான் போன்ற அரிய வகை உயிரினங்கள் வசிப்பதால் அவற்றைப் பாதுகாக்கும் வகையில் அப்பகுதியை பல்லுயிர் தலமாக அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத னால், மாவட்ட நிர்வாகம் தெத்தூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான சுமார் 80 ஏக்கரில் மத்திய சிறை வளாகம் அமைக்க ஆரம்பக் கட்டப் பணியைத் தொடங்கி இருப்பதாக அதி காரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சிறைத் துறை அதி காரிகள் கூறியதாவது: இடையபட்டியில் 85 ஏக்கர் இடம் தேர்வாகி பணிகள் தொடங்க விருந்த நிலையில் தற்போது அவ்விடம் மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கலாம் இன்னும் எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.
தெத்தூரைவிட இடையபட்டி மதுரை நகருக்கு அருகில் உள்ளது. உடல் நிலை பாதிக்கும் கைதிகளை மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சாலை வசதி, தூரம் போன்றவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதன்படி இடையபட்டியே வசதியாக இருக்கும் என கருதினோம். தற்போது அது மாறுகிறது என்றால் அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சிறைத் துறை உயரதிகாரிகள்தான் ஆலோசித்து முடிவெடுப்பர். அடுத்தடுத்த கட்ட ஆய்வு, ஆலோசனைக்குப் பிறகே இறுதி முடிவு தெரியும் என்று கூறினர்.