தமிழகம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதன் காரணமாகதமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவுமேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப். 28-ம் தேதி (நேற்று)காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில்பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 12 செ.மீ., சென்னை சோழிங்கநல்லூரில் 10 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சூறாவளிக் காற்று: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT