திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கயம் அருகே பகவதி பாளையத்தில் விவசாயிகள் மற்றும் பெண்கள் என சுமார் 150 பேர், கடந்த 7 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வரும் நிலையில், கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனப் பகுதிகளில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும், சமச்சீர் பாசனம் உள்ளதை போல, மடைக்கு 7 நாட்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சிதிலமடைந்த பகிர்மான, உபபகிர்மான வாய்க்கால் பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சீரமைப்பில் நீண்டகால அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும், பி.ஏ.பி தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டர், உபகரணங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கயத்தில் கடந்த 7 நாட்களாக வெள்ள கோவில் பிஏபி கிளை விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை முத்தூர் பிரிவு அருகே நேற்று பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காங்கயம் போலீஸார், வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. விவசாயிகளின் போராட்டத் துக்கு ஆதரவாக காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன.