தமிழகம்

ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு ஊக்குவிப்பு: நீதிபதிகள் வேதனை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்திய நாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தபோது, ரயில்வே நிர்வாகம் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஊக்குவித்து வருவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தேபாரத் ரயில்களிலும்கூட அதிகஅளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு உள்ளது. எனவே,பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பது குறித்து ரயில்வேநிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தொடர்ந்து நீதிபதிகள், இந்தியாவில் ஆண்டுக்கு 430 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் மூன்றில் இரண்டு பங்கு பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு குப்பையில் வீசப்படுவதாகவும், இந்தக் கழிவுகள் நீர்வழித்தடம் மற்றும் நீர்நிலைகளில் கலந்து, கோடை காலங்களில் தண் ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

மேலும், முன்னோர்கள் தண்ணீரை ஆறுகளில் பார்த்ததாகவும், தந்தை காலத்தில் கிணறுகளில் பார்த்ததாகவும், தற்போது குழாய்களில் பார்ப்பதாகவும், மகன்கள் காலத்தில் பாட்டில்களில் பார்க்கப்படுவதாகவும், பேரக் குழந்தைகள் காலத்தில் மாத்திரைகள் வடிவில்தான் பார்க்க நேரிடும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், நீரின்றி அமையாது உலகு என்ற குறள் மூலமாக திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தண்ணீரின் தேவையை உணர்த்தி உள்ளார். ஆனால், உணவுப் பொருட் களை விற்பனை செய்யும் நிறுவனங் கள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யஉத்தரவிட்டு, விசாரணையை அக்.9-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT