தமிழகம்

மாதவரம் - சோழவரம் இடையே 16 கி.மீ. நீளத்துக்கு உயர்நிலை மேம்பாலம் அமைக்க ரூ.1,900 கோடி மதிப்பில் திட்டம்: சுதர்சனம் எம்எல்ஏ தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மாதவரம் - சோழவரம் இடையே 16 கி.மீ. நீளத்துக்கு ரூ.1,900 கோடியில் உயர்நிலை மேலம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனம் தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரம் தொகுதி, மாநகராட்சியின் மாதவரம் மண்டலத்தில், 27-வது வார்டில் மக்கள் குறைதீர் கூட்டம், தொகுதி எம்எல்ஏ சுதர்சனம் தலைமையில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் சாலைகளை சீரமைத்தல், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துதல், குடிநீர் விநியோகம் தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இக்கூட்டத்தில் சுதர்சனம் எம்எல்ஏ பேசியதாவது:

மாதவரம் தொகுதி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாதவரம் ரவுண்டானா முதல் சோழவரம் வரை 16 கி.மீ. நீள சாலையில் காவாங்கரை, வடகரை, பாலவயல் ஆகிய 3 சாலை சந்திப்புகள் வருகின்றன. இவற்றில் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு, அண்மை காலத்தில் சுமார் 200 பேர் இறந்துள்ளனர்.

இதை தடுக்க மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறைகள் சார்பில் ரூ.1,900 கோடியில் உயர்நிலை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தமிழ்நாடு ஜிஎஸ்டி தொகையை ரத்து செய்ய வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை கோரியுள்ளது. அது தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும்.

கடந்த 1996-ம் ஆண்டு கொரட்டூர் மற்றும் அம்பத்தூர் ஏரிகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதைத் தடுக்க அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, 3.25 கி.மீ. நீளத்துக்கு தணிகாச்சலம் கால்வாயை அமைத்தார். அதை சீரமைக்க ரூ.78 கோடியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். அப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் மாதவரம் தொகுதியில் மழை வெள்ள பாதிப்பு தடுக்கப்படும். மேலும் மணலி பகுதியில் உள்ள இரு ஏரிகளை சீரமைக்க ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை் ரூ.400 கோடியில் மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மாதவரம் ரெட்டேரியை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சுற்றுலாத் தலமாக மாற்ற ரூ.43 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு தொகுதிவளர்ச்சிக்காக ஏராளமான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மண்டலக் குழுத் தலைவர் நந்தகோபால், கவுன்சிலர் சந்திரன், மண்டலஉதவி ஆணையர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT