சென்னை: அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்திருப்பதற்காக மத்திய அரசு ‘ஸ்வச்சதா பக்வாடா’ என்ற தூய்மைப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் தூய்மைப் பிரச்சாரம் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. வரும் அக்.2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள், பணிமனைகள், ரயில்வே குடியிருப்புகள், ரயில்வே மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், ரயில்வே அலுவலகங்களில் தூய்மைப்பணி மற்றும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல், பெரம்பூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் தூய்மைப்பணி நேற்று நடைபெற்றது. இதுதவிர, ரயில் பெட்டி பராமரிப்பு மையங்கள், ரயில்கள், மருத்துவமனைகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியது: சென்னை சென்ட்ரல், எழும்பூர்,தாம்பரம் உள்பட முக்கிய ரயில்நிலையங்கள், ரயில்வே பணிமனைகள், அலுவலகங்களில் தூய்மைப்பணியும், தூய்மை தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெறுகிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் தாம்பரம், ஆவடி, பேசின்பாலம், வில்லிவாக்கம் உள்பட 30 ரயில் நிலையங்கள், பெட்டிகள் பராமரிப்பு மையங்களில் வரும் 1-ம் தேதி தூய்மை தொடர்பாக பிரச்சாரம், தூய்மைப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் சாரண சாரணியர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ரயில்வே ஊழியர்கள்பங்கேற்கின்றனர். இதுதவிர, சென்னை சென்ட்ரல், எழும்பூரில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறும்.