கொடைக்கானல்: கொடைக்கானல் சுங்கச் சாவடியில் ‘பாஸ்டேக், கியூஆர் குறியீடு’ முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை சோதனை அடிப்படையில் நேற்று தொடங்கப்பட்டது.
புதிய நடைமுறையால் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன. கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் வெள்ளி நீர்வீழ்ச்சிஅருகே ரொக்க முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் நகராட்சி விலக்கு அளித்துள்ளது.
அதற்காக, இப்பகுதியில் வசிப்பவர்கள் உரிய ஆவணங்களை நகராட்சியில் சமர்ப்பித்து தங்கள் வாகனங்களுக்கு (பாஸ்) அனுமதி பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள ரொக்க முறையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதால் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதைத் தவிர்க்க, ‘பாஸ்டேக்’, ‘கியூஆர் கோட்’ போன்றவை மூலம் கட்டணம் வசூலிக்க நகராட்சிநிர்வாகம் முடிவு செய்தது. இத்திட்டம் முதலில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். பின்னர் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை முதல் கொடைக்கானல் சுங்கச் சாவடியில் ‘பாஸ்டேக், கியூஆர் கோட்’ முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
சுங்கச்சாவடியில் இருநுழைவு வழித்தடத்தில் ஒன்றில் மட்டுமே இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டதால் கொடைக்கானல் நகருக்குள் நுழைய வாகனங்கள் 3 கி.மீ. தொலைவுக்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தன.வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
இது குறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சத்திய நாதன் கூறுகையில், சுற்றுலாப் பயணிகளின் சிரமங்களைத் தவிர்க்க பிற்பகலுக்குப் பின் 2 வழித்தடங்களிலும் இந்த புதிய நடைமுறையில் கட்டணம் வசூலிக் கப்படுகிறது. ஒரு வாரத்துக்குப் பின் இம்முறை முழுவதுமாக அமல்படுத்தப்படும் என்றார்.