திருவண்ணாமலை கிரிவல பாதையில் யாசகம் பெற அழைத்து வரப்பட்ட சிறுவர்களை மீட்ட காவல் துறையினர் மற்றும் சமூக நலத்துறையினர். 
தமிழகம்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் யாசகம் பெற அழைத்து வரப்பட்ட 14 சிறுவர்கள் மீட்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தையொட்டி கிரிவலப் பாதையில் யாசகம் பெற அழைத்து வரப்பட்ட 14 சிறுவர்களை, காவல் துறையினர் பாதுகாப்புடன் சமூக நலத்துறையினர் மீட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவல நாட்களில் ‘யாசகம்’ பெற ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு விடுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அழைத்து வரப்படுகின்றனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுகிறது.

கிரிவலப் பாதையில் அமர்ந்தும் மற்றும் கிரிவலம் செல்லும் பக்தர்களை வழிமறித்தும் யாசகம் கேட்டு பெறுகின்றனர். பவுர்ணமி கிரிவலத்தில் யாசகம் கேட்கும் சிறுவர்களை மீட்பது குறித்து சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ‘சைல்டு லைன்’ அமைப்பு உள்ளிட்டவர்களை அழைத்து காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதில், யாசகம் கேட்கும் சிறுவர்கள் மற்றும் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் சிறுவர்களை, காவல்துறை பாதுகாப்புடன் மீட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவல நாளான நேற்று மாலை அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி எலிசபெத்,

கள பணியாளர் சண்முக வள்ளி, ‘சைல்டு லைன் ’கள பணியாளர் பரமசிவம் ஆகியோர் காவல் துறை பாதுகாப்புடன் கிரிவலப் பாதையில் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், மோரணம், கொண்டம், கோ சாலை உட்பட பல ஊர்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள் மற்றும் 5 சிறுமிகளை மீட்டனர்.

இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். பொம்மை விற்பனை செய்ய லாம் என பலர் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களிடம் பொம்மை உள்ளிட்ட விற்பனை பொருட்கள் ஏதுமில்லை என சமூக நலத் துறையினர் கூறுகின்றனர். கிரிவலப் பாதையில் மீட்கப்பட்டுள்ள 14 சிறுவர், சிறுமிகளும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அழைத்து வந்த நபர்கள் குறித்து திருவண்ணாமலை கிராமிய மற்றும் மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் படிக்கும் சிறுவர்களை யாசகம் பெறவும் மற்றும் பொருட்களை விற்பனை செய்யவும் அழைத்து வந்தவர்களிடம் குழந்தை நல குழுமம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி எலிசபெத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT