வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் விரிஞ்சிபுரம் பகுதி பாலாற்றில் ஓடும் மழைநீர். படம் :வி.எம்.மணிநாதன் 
தமிழகம்

தொடர்மழை எதிரொலி: பாலாற்றில் 729 கனஅடிக்கு வெள்ளப்பெருக்கு

செய்திப்பிரிவு

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவழை காரணமாக தொடர்ந்து, மழை பெய்து வருவதால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றில் நேற்றைய நிலவரப்படி 729 கன அடிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வட மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அடுத்த 10 நாட்களுக்கும் மழை இருக்கும் என்பதால் வட கிழக்கு பருவமழைக்கு முன்பாகவே ஓரளவுக்கு நீர்நிலைகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் அதையொட்டிய ஆந்திர மாநில வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால், ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து பாலாற்றுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக- ஆந்திர எல்லையில் புல்லூர் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால் பாலாற்றுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல், பாலாற்றின் துணை ஆறுகளான மலட்டாறு, அகரம் ஆறு, பொன்னை ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை நிரம்பினால், அங்கிருந்தும் பாலாற்றுக்கு நீர்வரத்து இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து புல்லூர் தடுப்பணையை கடந்து 250 கனஅடிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், பாலாற்றின் முக்கிய துணை ஆறான மலட்டாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலட்டாற்றில் இருந்து பாலாற்றுக்கு நேற்று 100 கனஅடி, அகரம் ஆற்றில் இருந்து பாலாற்றுக்கு 150 கனஅடி, பொன்னை ஆற்றில் இருந்த 75 கனஅடி தண்ணீரும் பாலாற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஒட்டு மொத்தமாக வாலாஜா பாலாறு அணைக்கட்டு பகுதிக்கு 729 கன அடிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை தொடரும் என்பதால் பாலாற்றில் வரும் நாட்களில் அதிகப்படியான நீர்வரத்தை எதிர்பார்க்கலாம் என்று பொதுப்பணித்துறை நீர்வள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மழையளவு விவரம்: வேலூர் மாவட்டத் தில் நேற்று காலை நிலவரப்படி அதிக பட்சமாக பொன்னையில் 24.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒடுக்கத்தூர் வனச்சரக அலுவலக வளாகம் 5, மேல் ஆலத்தூர் 2.40, மோர்தானா அணை பகுதி 18, விரிஞ்சிபுரம் வேளாண் விரிவாக்க மையம் பகுதி 9.2, ராஜாதோப்பு அணை பகுதி 8, காட்பாடி 20.2, அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதி 12, சத்துவாச்சாரி 12.4, வேலூர் 10, பேரணாம் பட்டு 2.2 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

மழையளவு விவரம்: வேலூர் மாவட்டத் தில் நேற்று காலை நிலவரப்படி அதிக பட்சமாக பொன்னையில் 24.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒடுக்கத்தூர் வனச்சரக அலுவலக வளாகம் 5, மேல் ஆலத்தூர் 2.40, மோர்தானா அணை பகுதி 18, விரிஞ்சிபுரம் வேளாண் விரிவாக்க மையம் பகுதி 9.2, ராஜாதோப்பு அணை பகுதி 8, காட்பாடி 20.2, அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதி 12, சத்துவாச்சாரி 12.4, வேலூர் 10, பேரணாம் பட்டு 2.2 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

SCROLL FOR NEXT