‘இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக, புட்லூர் ரயில்நிலைய கடவுப் பாதை மேம்பாலம் மீது பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டு தற்போது அவை ஒளிர்கின்றன. 
தமிழகம்

மின் விளக்குகள் சீரமைப்பு: ஒளிரும் புட்லூர் ரயில்வே மேம்பாலம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ எதிரொலியாக, இருளில் கிடந்த புட்லூர் ரயில் நிலைய கடவுப் பாதை மேம்பாலம் தற்போது ஒளிர்கிறது. சென்னை-திருவள்ளூர் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது புட்லூர் ரயில் நிலையம். இதன் அருகில் அமைந்துள்ளது காக்களூர் தொழிற்பேட்டை. இந்தத் தொழிற்பேட்டை வழியாக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையும், சென்னை- திருமழிசை-திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், அரண்வாயல்குப்பம்- காக்களூர் இடையே மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலை வழியாக காக்களூர் தொழிற்பேட்டைக்கு கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இச்சாலை பராமரிப்பின்றி ஒத்தையடிப் பாதையாக காட்சியளிக்கிறது. இதனால், வாகனஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், புட்லூர் ரயில் நிலையத்தில் கடவுப் பாதை குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. ஆனால், இப்பாலம் இதுவரை அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவில்லை. அதேசமயம், இப்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

இதையடுத்து, திருமழிசையில் இருந்து காக்களூருக்கு வரும் கன்டெய்னர் லாரிகள் திருவள்ளூர் வழியாக சென்றால் 7 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் இப்பாலம் வழியாக லாரிகளும் வருகின்றன.

அதற்கு ஏற்ற வகையில், அரண்வாயல் குப்பம்- காக்களூர் நெடுஞ்சாலை அகலமாக இல்லை. 30 அடி அகலம் கொண்டுள்ள இச்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் வரும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நிற்கக் கூட இடம் இல்லாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. அத்துடன், பாலத்தின் மீதும் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால், இரவு நேரத்தில் பாலத்தின் மீது பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடனேயே சென்றனர்.

இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், ‘ஒத்தையடிப் பாதையும், ‘ஓப்பன்’ பண்ணாத பாலமும்… காக்களூர் பகுதி வாகன ஓட்டிகள் அவதி’ என்ற தலைப்பில் படத்துடன் கூடிய விரிவான செய்தி கடந்த 25-ம் தேதி வெளியானது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை சீரமைத்தனர். இதற்காக, அப்பகுதி மக்கள் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், சேதம் அடைந்த காக்களூர்- அரண்வாயல்குப்பம் நெடுஞ்சாலையையும் அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT