சென்னை: மிலாது நபி பண்டிகை இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஏழைகளுக்கு உணவளியுங்கள் என்ற மகத்தான மனித நேயத்துக்கு சொந்தக்காரரான நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொரு வரும் கடைபிடிக்க வேண்டியவை. திமுகவும், கருணாநிதியும் இஸ்லாமிய சமுதாயத்துக்காக செய்த திட்டங்கள் மிக அதிகம். நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாது நபி நல்வாழ்த்துகள்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அன்பு இருந்தால்தான் பிறருக்கு உதவ முடியும் என்பதைஉறுதியாக நம்பி, அதன்படி வாழ்ந்து காட்டிய நபிகள் போதித்தநல்வழிகளைப் பின்பற்றி, எங்கும்அமைதி நிலவவும், சகோதரத்துவம் தழைத்தோங்கவும் உறுதி யேற்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: நபிகள் நாயகம் போதனைகளின்படி, அனைத்து மக்களிடமும் அன்பையும், ஏழைமக்களிடம் பரிவையும் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன்மூலம், வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலைமுறியடிக்க முடியும் என்ற நம் பிக்கை ஏற்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நபிகளின் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அறிவுரைகள், வழிமுறைகள், நம் சமுதாய அரசியல்பிணிகளைப் போக்கும் அருமருந்துகளாக விளங்கக் காணலாம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை வளரவும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று இந்த நன்னாளில் உறுதியேற்போம்.
பாமக தலைவர் அன்புமணி: நபிகளின் போதனைகளைப் பின்பற்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதி, வளம், மகிழ்ச்சி, ஒற்றுமைநிறைந்ததாக மாற்ற உறுதி ஏற்போம்.
விசிக தலைவர் திருமாவளவன்: இறைவனுக்கு மட்டுமே அஞ்சுதல் வேண்டும் என போதித்த நபிகள் நாயகம்,வேறு எதற்காகவும் அஞ்சிடத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை உலக சகோதரத்துவ நாளாகக் கடைபிடிப்போம்.
தமாகா தலைவர் ஜி.கே வாசன்: அனைவரது வாழ்வு செழிக்கவும்,அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி நிறையவும் வாழ்த்துகள்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழவும், நபிகள் வழியில் அயராது உழைக்கவும் உறுதியேற்போம்.
திருநாவுக்கரசர் எம்.பி.: நபிகள்பிறந்த நாளில் மத நல்லிணக்கம் தழைத்தோங்கி, மனிதகுலம் ஒற்றுமையாக வாழவும், வளம் பெறவும் பிரார்த்திப்போம்.
காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை: நபிகள் போதனைப்படி, அன்பு பெருகவும், அமைதி தவழவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைக்க உறுதி ஏற்போம்.
வி.கே.சசிகலா: நபிகள் உலகுக்கு அருளிய போதனைகளை அனைவரும் பின்பற்றி நடந்தால், வாழ்வில் ஏற்றம் பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.