ஹெச்.ராஜா | கோப்புப் படம் 
தமிழகம்

தமிழக தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில்லை: ஹெச்.ராஜா கருத்து

செய்திப்பிரிவு

ஈரோடு: தமிழக தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் என்பது வெற்றியைத் தீர்மானிப்பதில்லை, என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

ஈரோட்டில் தனியார் அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, சனாதன இந்து தர்மத்தை அழிப்பேன் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது. சாதிய ஏற்றத்தாழ்வுக்கு சனாதனம் காரணம் என்று சொல்வது போலியானது.

அதிமுக -பாஜக இடையேயான கூட்டணி முறிவு குறித்து இரு நாட்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதன் பின்னர், அதுகுறித்து அதிமுகவினர் பேசவில்லை. அதற்கு நான் உள் நோக்கம் தெரிவிக்க விரும்பவில்லை. கூட்டணி குறித்து எங்கள் கருத்தை அகில இந்திய தலைமை அறிவிக்கும்.

அதுவரை அமைதியாய் இருப்போம். கடந்த காலங்களில் பாஜகவுடன் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வைத்த போது அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். அதனால் சிறுபான்மை வாக்குகள் என்பது தமிழக தேர்தலில் பிரச்சினையாக இருந்ததில்லை. அது வெற்றியை தீர்மானிப்பதும் இல்லை.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்த பாஜக அரசு, தமிழகத்துக்கு ஒரு போதும் துரோகம் இழைக்காது. அமலாக்கத்துறை யார் மீதும் தவறாக வழக்குப் பதிவு செய்யாது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT